top of page
Marble Surface

ஆற்காடு மாவட்ட செய்திகள்  

ஆற்காடு மாவட்டங்களின் நபர்களை அறிமுகப்படுத்தும் பக்கம்

திரு. நா.சுப்ரமணியம் அவர்கள் 

வடாற்காடு ஸ்மார்த்தா; கௌசிக கோத்ரம்; யஜுர் வேதம். பிறந்த ஊர் குருவிமலை; பூர்வீகம்:வணக்கம்பாடி [ஆற்காடு-ஆரணி பஸ் மார்க்கத்தில், திமிரியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ளது; பிறந்த தேதி:4-6-1944 - [பரணி நட்சத்திரம்]. 

 

பிறந்ததில் இருந்து எனக்குத் தெரிந்த ஒரே கடவுளான ஸ்ரீ வரசித்தி விநாயகருடைய ஆசியுடன் எனது கிராம வாழ்க்கையை விவரிக்கத் தொடங்குகிறேன்.[இந்த கிராமிய மணத்தையும் அதன் மண் வாசனையையும் தாங்களும் உணர்ந்து ரசிக்க விழைகிறேன்]. அவர்தான் என்றென்றும் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் “பிரார்த்தனா தெய்வம்” ஆவார்.இன்றுவரையிலும் ஒவ்வொரு வருடமும் இரண்டு அல்லது மூன்று முறை நாங்கள் நிச்சயமாக நேரில் சென்று அவரிடம் பிரார்த்தனை செய்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்று வருகிறோம். 1963ல் மாநில அரசிலும், 1964ல் மத்திய அரசிலும் பணி நியமனம் ஆனதனால் கிராமத்தை விட்டு வெளியேறினேன்.

 

“கங்கை நிகராம்” சேயாற்றில், காலைச்சந்திக் கடன் கழித்து, மங்கை கனகச் சிவிகையின் மேல் மறை ஓலம் இட வழி கொண்டாள்", என அன்னை ஆதி பராசக்தி நீராடியதால், மகரவாகினியான கங்கை நதிக்கு நிகராக புனிதமானது சேயாறு என்று அருணாசல புராணம் கூறுகிறது.  இத்தகைய பெருமை கொண்ட செய்யாற்றின் கரையில் உள்ளது எனது பிறந்த ஊர் குருவிமலை. {இது தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தில், வேலூர் - திருவண்ணாமலை பஸ் மார்க்கத்தில், போளூருக்கும் கலசப்பக்கத்திற்கும் இடையில், போளூரில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ளது}   கிராமத்தில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளில் ஒன்று நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையின் பொன்னான நாட்களைப் பற்றியதாக இருக்கும். நான் குருவிமலை (முதலில் குரு மூலையாக இருந்து [திருவண்ணாமலைக்கு குரு மூலை] பின்னர் குருக்கள் மலையாக [பல கோயில் அர்ச்சகர்கள் வாழ்ந்த இடமாதலால்] மாறி, இப்போது இறுதியாக தற்போதைய பெயரில் அழைக்கப்படுகின்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது கிராமம் துரதிர்ஷ்டவசமாக அதன் முந்தைய பெயர்களின் புனிதத்தன்மை அனைத்தையும் இழந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும், "கந்தஷஷ்டி” விழாவின் போது வில்வாரணியிலிருந்து [நட்சத்திரக்கோவில்] முருகப்பெருமான், பல கிராமங்களைக் கடந்து, "சூர சம்ஹாரம்" நாளில் எங்கள் கிராமம் அமைந்துள்ள செய்யாற்றில் தீர்த்தவாரி செய்வதற்காக ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இத்தெய்வம் இந்த வரசித்தி விநாயகர் கோவிலில் ஒரு இரவு தங்கி நமக்கு அருள்பாலிப்பார். அக்காலத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் போலவே, எங்கள் கிராமத்தின் நுழைவாயிலிலும் நீண்ட வாளுடன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் “ஐயனார்” எல்லைக் காவல் தெய்வம் இருந்தது. அப்போது எனது கிராமம் 200 குடும்பங்களுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டதாக இருந்தது. எப்பொழுதும் தூய்மையான சூழல் இல்லாமல் பாழடைந்த நிலையில் இருந்த நமது சிவன் கோவிலில் உள்ள சன்னதியின் முக்கியத்துவத்தை அக்காலத்தில் கிராமத்தில் உள்ள எவரும் அறிந்திருக்கவில்லை. உண்மையைச் சொல்வதானால், ஸ்ரீ பரணிதரன் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் அருளால் 1970 களில் ஆனந்த விகடன் வார இதழில் "அருணாச்சல மகிமை" என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைகளின் மூலம் இவ்வாலயத்தின் வரலாற்றை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபோதுதான்  நாங்கள் அனைவரும் இதன் உயர்ந்த புனிதத்தை அறிந்தோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சமயம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன்.ஒரு நாள் பார்வதி தேவி சிவபெருமானுக்கு “அபிஷேகம்” செய்ய புனித நீர் கொணர, தனது குழந்தை முருகப்பெருமானை ஏவ, அவரும் தனது அம்பினை எய்து பூமியில் இருந்து ஒரு ஆற்றினை உண்டாக்கினார். அது சமயம் அவரது அம்பு வழியில் ஏழு மலைகளில் தவம் செய்து கொண்டிருந்த, முறையே: போதவான், புத்திராண்டான், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன், வாமன்  ஆகிய ஏழு ரிஷிகளின் தலைகளைத் துளைத்துச் சென்றது. [இதனால், அம்முனிவர்களும் பாப விமோசனம் அடைந்தனர்]. எனினும், முனிவர்களைக் கொன்ற பாவத்தைப் [பிரம்மஹத்திதோஷம்] போக்குவதற்காக, முருகப்பெருமானே நேரடியாக செய்யாற்றின் வட கரையில் ஏழு ஊர்களில் ["ஆதி-கரைகண்டேஸ்வரர்"] ஏழு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக கூறப்படுகிறது. சேயால் [குழந்தை] உருவாக்கப்பட்ட ஆறு (நதி).  [சேய்+ஆறு=சேயாறு / செய்யாறு] என அழைக்கப் பட்டது, மற்றும் முனிவர்களின் சிவந்த இரத்தம் ஆற்றில் கலந்ததால் சேயாறு [செம்மை+ஆறு] என்றும் அழைக்கப்பட்டது.இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட ஏழு ஊர்கள்- காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென் மகாதேவ மங்களம், எலத்தூர், பூண்டி & குருவிமலை ஆகும். இந்த ஏழு ஊர்களிலும் ஸ்வாமியின் பெயர் கரை கண்டேஸ்வரர் எனவும் அம்பாளின் பெயர் பெரியநாயகி  எனவும் கோவில் கொண்டுள்ளனர் என்பது சிறப்பம்சமாகும். .இவையே ஸப்த கரை கண்டேஸ்வரர் ஆலயங்கள் ஆகும்.  முருகப் பெருமானை ஏவிய செயல், அன்னையைச் சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்தது. எனவே, அந்த தோஷம் நீங்கிட, காமாட்சியம்மை, சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவாலயங்களை உருவாக்கினாள். அவை  ஸப்தகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை முறையே மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகும். இவ்வனைத்து ஸ்தலங்களையும் செய்யாற்றில் இறங்கி வாசுதேவம்பட்டியில் ஆரம்பித்து மண்டகுளத்தூர் வரை நடந்து சென்றாலே, வலமும்  இடமுமாக மாறி மாறி ஸ்வாமி தரிசனம் செய்ய முடியும். 

குருவிமலை கரை கண்டேஸ்வரர் ஆலயம் பல நூற்றாண்டுகளுக்குப்பின்  முதன் முறையாக 17-06-2007 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மீண்டும் 11-7-2019 அன்று  மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விருமுறையும், விழாவினை சிறப்புற முன்னின்று நடத்திக் கொடுத்த பெருமை போளூர் ஸ்ரீ சங்கர வேத பாடசாலை  ஸ்ரீ மகாபலேஷ்வர் பட் அவர்களையே சாரும்.  

bottom of page